131. ஞாயிற்றுக் கிழமையை அனுசரித்தல்!

ஞானோபதேச ஆடியோவைக் கேட்க மேலே உள்ள படத்தைக் கிளிக் செய்யுங்கள்...

1.  மூன்றாம் கற்பனையைச் சொல்லு.

“சர்வேசுரனுடைய திருநாட்களைப் பரிசுத்தமாய் அனுசரிக்க மறவாதிருப்பாயாக.” 

2. மூன்றாம் கற்பனைக்கும் முதல் கற்பனைக்குமுள்ள சம்பந்தமென்ன?

முதல் கற்பனை சர்வேசுரனை ஆராதிக்க வேண்டும் என்று கற்பிக்கிறது; மூன்றாம் கற்பனையோ அந்த ஆராதனையை எந்த நாட்களில் விசேஷித்த விதமாய்ச் செலுத்த வேண்டுமென்று குறிக்கிறது.

132. மூன்றாம் கற்பனையால் சர்வேசுரன் நமக்குக் கற்பிக்கிற தென்ன?

தேவ ஆராதனை செய்வதற்குக் குறிக்கப்பட்ட நாட்களைப் பரிசுத்தப் படுத்தவும், அந்த நாட்களில் வேலை செய்யாமல் இருக்கவும் வேண்டு மெனக் கற்பிக்கிறார்.

133. சர்வேசுரனுடைய திருநாட்கள் எவை?

ஞாயிற்றுக்கிழமைகளும், கடன் திருநாட்களுமாம்.

1.  சேசுநாதருடைய வருகைக்கு முன் யூதர்கள் எந்த நாளை சர்வேசுரனுடைய நாளாக அநுசரித்து வந்தார்கள்?

பழைய ஏற்பாட்டின் காலத்தில் அநேக திருநாட்களிருந்தன. ஆனாலும் யூதர்கள் சர்வேசுரன் கற்பித்தபடி, அவர் உலகத்தை ஆறு நாளில் சிருஷ்டித்தபின், ஏழாம் நாள் இளைப்பாறினதன் ஞாபகமாக, அவருக்கு ஆராதனை செய்யும்படி சனிக்கிழமையையே ஓய்வு நாளாக அனுசரிக்க வந்தார்கள். “ஏழாம் நாளிலோ உன் தேவனாகிய கர்த்தருடைய “சாபாத்” நாளாகயிருப்பதால், அன்று நீயாவது, உன் குமாரன் குமாரத்தியையாவது, உன் வேலைக்காரன் வேலைக்காரியாகிலும், உன் மிருகசீவன் அல்லது உன் வாசல்களில் இருக்கிற அந்நியனென்கிலும் யாதொரு வேலையும் செய்ய வேண்டாம். ஏனென்றால், கர்த்தர் ஆறு நாளுக்குள் வானத்தையும், பூமியையும், கடலையும், இவைகளிலுள்ள சகலத்தையும் படைத்து ஏழாம் நாளிலே ஓய்வு கொண்டருளினமையால், கர்த்தர் சபாத் நாளை ஆசீர்வதித்துப் பரிசுத்தமாக்கினார்” என்று வேதாகமத்தில் எழுதியிருக்கிறது (யாத். 20:10-11).

2. சாபாத் என்னும் பதத்திற்கு அர்த்தமென்ன?

எபிரேய பாஷையில் இளைப்பாற்றி, ஓய்ந்திருத்தல் என்று அர்த்தமாம்.

3. அந்தக் கட்டளை கண்டிப்பான கற்பனையாயிருந்ததா?

பழைய ஏற்பாட்டின் காலத்தில் ஒருவன் ஓய்வுநாளிலே அடிமை வேலை செய்தால், அவனுக்கு மரண ஆக்கினை விதிப்பது வழக்கம். இப்படியே சாபாத் நாளில் விறகு பொறுக்கின ஒருவனைக் கல்லாலெறிந்து கொல்லவேண்டுமென்று மோயீசன் சர்வேசுரனுடைய நாமத்தினாலே கட்டளையிட்டார் (எண். 15:25).

4. புதிய ஏற்பாட்டின் காலத்தில் சனிக்கிழமையை ஏன் ஓய்வு நாளாக அநுசரிக்கிறதில்லை?

ஏனெனில், சேசுநாதர்சுவாமி உயிர்த்தெழுந்ததும், இஸ்பிரீத்து சாந்துவாகிய சர்வேசுரன் இறங்கினதும் ஞாயிற்றுக்கிழமையாதலால், ஞாயிற்றுக்கிழமையை ஓய்வு நாளாக அனுசரிக்க வேண்டுமென்று திருச்சபை கற்பித்திருக்கின்றது. இதுவுமன்றி, திருச்சபை இன்னும் வேறு நாட்களையும் கொண்டாடுகிறது.

5. திருநாட்கள் என்று மட்டும் சொல்லாமல், கடன் திருநாட்கள் என்று சொல்வானேன்?

திருச்சபையானது வேதத்தின் பரம இரகசியங்களை நமக்கு ஞாபகப்படுத்தி அவைகளுக்காக நன்றியறிந்திருக்கும்படியாகவும், தேவமாதா, அர்ச்சியசிஷ்டவர்கள் முதலியவர்களின் புண்ணியங்களையும், சம்பாவனையையும் நினைப்பூட்டி அவர்களைக் கண்டு பாவிக்கும்படியாகவும் அநேக திருநாட்களை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் அந்தத் திருநாட்களையெல்லாம் அனுசரிக்க வேண்டுமென்று திருச்சபை கற்பிக்காமல், சில திருநாட்களை மட்டும் கடன் திருநாளாக ஏற்படுத்தியிருக்கிறது. இப்படிக் கடன் திருநாளாக ஏற்படுத்தப்பட்ட திருநாட்களை அனுசரிக்கா விட்டால் பாவமாகும்.

6. ஞாயிற்றுக்கிழமையையும், கடன் திருநாட்களையும் பரிசுத்தமாய் அனுசரிப்பதற்கு வேண்டிய காரியங்கள் எவை?

1-வது. கஷ்டமான வேலை செய்யலாகாது.

2-வது. அன்று திவ்வியபூசை காண வேண்டியது.

கருத்துகள்