133. பெற்றோர் மட்டில் குழந்தைகளுக்குள்ள கடமைகள்!

ஞானோபதேச ஆடியோவைக் கேட்க மேலே உள்ள படத்தைக் கிளிக் செய்யுங்கள்...

135. நான்காம் கற்பனையால் சர்வேசுரன் நமக்குக் கற்பிக் கிறதென்ன?

தாய் தகப்பனுக்குச் சங்கை, சிநேகம், கீழ்ப்படிதல், அவசியமான சமயத்திற்கு உதவி இவை முதலிய கடமைகளைச் செலுத்தக் கற்பிக்கிறார்.

1.  பிள்ளைகள் ஏன் தங்கள் தாயையும் தகப்பனையும் சங்கிக்க வேண்டும்?

(1) “உன் தந்தையையும் தாயையும் சங்கித்திருப்பாயாக” என்று சர்வேசுரன் கற்பித்திருக்கிறார் (யாத். 20:13).

(2) பெற்றோர் சர்வேசுரனுக்குப் பதிலாளிகளாயிருக் கிறார்கள்.

(3) பெற்றோரைச் சங்கியாதவர்கள் சர்வேசுரனுடைய சாபத்துக்கு உட்படுகிறார்கள். “தன் தகப்பனையும் தன் தாயையும் சங்கித்திராதவன் எவனோ அவன்மேல் சாபம்” (உபா. 27:16). “தன் பிதாவையும் இகழ்ந்து தன் மாதாவின் பிரசவ வேதனைகளையும் புறக்கணிக்கிறவன் எவனோ, அவனுடைய கண்ணை நீரோட்டத்திலுள்ள காக்கைகள் பிடுங்கவும், கழுகின் குஞ்சுகள் அவனைத் தின்னவும் கடவன” (பழமொழி. 30:17).

(4) பெற்றோரைச் சங்கிக்கிறவர்கள் சம்பாவனை அடைவார்கள். “தன் தாயைச் சங்கிபிப்பவன் திரவியங்களைச் சேர்த்தவன் போல் வாழ்வான். தன் தந்தையைச் சங்கிப்பவன் மக்களால் சந்தோஷமடைவான்; அவன் வேண்டுதலும் கேட்கப்படும்” (சர். பிர. 3:5,6).

(5) பெற்றோரை நிந்திக்கிற பிள்ளைகளைக் கெட்டவர்கள் என்றும், போக்கிரிகளென்றும் மனிதர் முதலாய் நிந்தித்து, வெறுத்துத் தள்ளுவார்கள்.

2. பெற்றோர்களைத் தக்கவிதமாய்ச் சங்கிக்கும் பிள்ளைகளுக்கு என்ன விசேஷ சம்பாவனை கொடுப்பதாகச் சர்வேசுரன் வாக்களித்திருக்கிறார்?

சர்வேசுரன் இவ்வுலகத்தில் முதலாய் அவர்களை ஆசீர்வதிப்பதாகவும், அவர்களுடைய ஆத்தும இரட்சணியத்துக்கு நன்மையாயிருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு நீண்ட சீவியத்தை அளிப்பதாகவும் வாக்களித்திருக்கிறார். “தன் தந்தையைச் சங்கிக்கிறவன் நெடுங் காலம் சீவிப்பான்” (சர். பிர. 3:7). “நீ வெகுகாலமாய்ச் சீவித்திருக்கத் தக்கதாகக் கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே உன் பிதாவையும் மாதாவையும் சங்கித்திருக்கக்கடவாய்” (உபா. 5:16).

3. அவர்களுக்குக் காண்பிக்கவேண்டிய சங்கை எதில் அடங்கி யிருக்கிறது?

அவர்கள் மட்டில் உள்ளத்தில் நல்ல எண்ணமும், மதிப்பும் வைப்பதிலும்; வெளியரங்கமாய்ப் பேச்சிலும், வார்த்தையிலும், செய்கையிலும், மரியாதை அனுசரிப்பதிலும் அடங்கியிருக்கிறது. ஆகையினாலே, அவர்களோடு பேசும்போது மேரை மரியாதையுடன் பேசவேண்டுமேயல்லாமல், அவர்களுடைய குற்றங்குறைகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தவோ, அவர்களை மிரட்டி அடிக்கவோ, அவர்களுடைய கிழ வயதையும், தரித்திரத்தையும், குற்றங்களையும் முதலாய் முன்னிட்டு அவர்களைப் பழிக்கவோ கூடாது.

4. கற்பிக்கப்பட்ட சங்கை மரியாதை அனுசரியாததினால் கனமான பாவம் கட்டிக் கொள்ளுகிற பிள்ளைகள் யார்?

தாய் தகப்பனை நிந்தையாய் நடத்துபவர்களும், அவர்களுக்கு விரோதமாய்ப் பேசி, அவர்கள் நல்ல பேரைக் கெடுக்கிறவர்களும்; அவர்களைத் தூஷணிக்கிறவர்களும், சபிக்கிறவர்களும்; அவர்களை பழித்துக் கேலிபரிகாசம் பண்ணுகிறவர்களும்; அவர்களுக்குப் புத்தியில்லை, மூளையில்லை, ஒன்றும் தெரியாத மூடர், பைத்தியக்காரர் என்று நிந்தித்து அவர்களுக்குப் பெரிய மன வருத்தம் உண்டாக்குபவர்களும்; அவர்களைக் கை ஓங்கி அடிக்கிறவர்களுமாம்.

5. தங்கள் பெற்றோர்களைச் சபிக்கிற பிள்ளைகளுக்கு எந்தத் தண்டனை இடவேண்டுமென்று சர்வேசுரன் கற்பித்திருந்தார்?

“தனது தகப்பனையாவது, தாயையாவது சபித்திருப்பவன் எவனோ, அவன் சாகவே சாகக்கடவான்” (யாத். 21:17) என்று சர்வேசுரன் கற்பித்திருந்தார்.

6.  பெற்றோர்களை ஏன் சிநேகிக்க வேண்டும்?

சர்வேசுரனுக்குப் பிறகு நமக்குச் சீவனைக் கொடுத்து அவர்கள் நமக்காகப் பலவிதத்தில் சொல்லமுடியாத கவலை, பிரயாசை, கஷ்டங்கள் பட்டிருக்கிறார்கள். “உன் தாயின் புலம்பல்களை நீ மறவாதே” (சர். பிர. 7:29).

7.  பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களை எப்படிச் சிநேகிக்க வேண்டும்?

(1) உள்ளத்தில் முழு இருதயத்தோடு அவர்களைச் சிநேகிக்க வேண்டும்.

(2) அந்த நேசத்தை வார்த்தையினாலும், செய்கையினாலும், வெளியரங்கமாய்க் காண்பிக்கவேண்டும். ஆகையினாலே, பெற்றோர் மட்டில் மெய்யான நேசமுள்ள பிள்ளைகள் தங்களுக்குப் பிரியமானவைகளையும், தங்கள் சுகபாக்கியத்தையும் முதலாய்த் தேடுவதைவிட பெற்றோர்களுக்குப் பிரியமானவைகளைத் தெரிந்துகொள்வார்கள்.

(3) சர்வேசுரன் பொருட்டு அவர்களைச் சிநேகிக்க வேண்டும்.

8.  பெற்றோர்களைச் சரியாய் நேசியாததால், கனமான பாவம் கட்டிக் கொள்ளுகிற பிள்ளைகள் யார்?

தாய் தந்தையரை உள்ளத்தில் வெறுத்துப் பகைக்கிறவர்களும், அவர்கள் மட்டில் உள்ள வெறுப்பை வெளியரங்கமாய்க் காண்பிக்கிறவர்களும், அவர்களுக்குக் கோபம் வருவித்துக் கனமான மன வருத்தம் உண்டாக்குகிறவர்களும், பெரிய துன்பங்கள், பொல்லாப்பு அவர்களுக்கு நேரிடவேண்டுமென்றும், அவர்கள் இறந்து போக வேண்டுமென்றும் விரும்புகிறவர்களுமாம்.

9.  ஏன் அவர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும்?

(1) பெற்றோர் சர்வேசுரனுடைய ஸ்தானத்திலிருக்கிறார்கள்.

(2 )அவர்களுக்கு நாம் கீழ்ப்படிய வேண்டுமென்று சுவாமியே கற்பித்தார். “பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்கு எல்லாக் காரியங்களிலும் கீழ்ப்படியுங்கள்; இது ஆண்டவருக்குப் பிரியமானது” என்று அர்ச். சின்னப்பர் வசனித்தார் (கொலோ. 3:20).

(3) பிள்ளைகள் கீழ்ப்படியாமல் போனால், குடும்பத்தில் ஒழுங்கும், சமாதானமும் நிலைக்கமுடியாது.

10. பிள்ளைகள் எப்படிக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும்?

சர்வேசுரனுடைய கட்டளைக்கு விரோதமில்லாதபோது:

(1) முறையிடாமலும், தத்தளியாமலும், முரண்டுபண்ணாமலும்,

(2) தீவிரமாயும், சந்தோஷமாயும், விசுவாசத்தோடும், சிநேகத்தோடும் சர்வேசுரனுக்கே கீழ்ப்படிவதுபோல்,

(3) எல்லாவற்றிலும் அவர்கள் சொற்படி கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.

11. பழைய ஏற்பாட்டில் கீழ்ப்படியாத பிள்ளைகளுக்கு விதித்திருந்த தண்டனை என்ன?

சில சமயங்களில் பெற்றோர்களுக்குக் கீழ்ப்படியாத பிள்ளைகளை அழித்துவிட வேண்டுமென்று பழைய ஏற்பாட்டிலே நிரூபிக்கப்பட்டிருந்தது (உபா. 21:18-21).

12. பெற்றோர்களுக்குக் கீழ்ப்படியாத பிள்ளைகள் கனமான பாவம் கட்டிக் கொள்ளுகிறார்களா?

(1) பிள்ளைகள் பெற்றோர்கள் அதிகாரத்துக்கு உட்பட்டிருக்கையில், அவர்களடைய கட்டளையானது தங்களுடைய நற்படிப்பினையைச் சேர்ந்ததாயிருந்தால், அல்லது அது வீட்டுக்கு மகா பெரிய நன்மை விளைவிக்கக் கூடியதாயிருந்தால், அந்தக் கட்டளையை மீறுவது அவர்களுக்குக் கனமான பாவமாகும்.

(2) பெற்றோர் சாவதற்குமுன் கட்டளையிட்ட தர்ம காரியங்களைச் செய்யாத பிள்ளைகளும் பெரிய பாவம் கட்டிக் கொள்கிறார்கள்.

13. பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களுக்கு ஏன் உதவி செய்ய வேண்டும்?

(1) அதைச் சர்வேசுரன் கற்பித்திருக்கிறார். “மகனே! உன் தந்தையின் விருத்தாப்பியத்தில் (முதிர்வயதில்) அவனை ஆதரி” (சர். பிர. 3:14). “தன் தந்தையைப் புறக்கணித்துவிடுகிறவன் எவ்வளவோ நிந்தைக்குரியவன்; தன் தாயை மனம் நோகச் செய்கிறவன் சர்வேசுரனால் சபிக்கப்பட்டவன்” (சர். பிர. 3:18).

(2) அவர்கள் தங்களுக்குச் செய்துவரும் கணக்கில்லாத உபகாரங்களுக்கு நன்றியறிதலாக.

14. அவர்களுக்குச் செய்ய வேண்டிய உதவி என்ன?

(1) பிள்ளைகள் நாள்தோறும் தங்கள் தாய் தகப்பனுடைய ஆத்தும சரீர நன்மைகளுக்காக வேண்டிக்கொள்ள வேண்டும்;

(2) அவர்களுடைய சரீரத்துக்கு அவசியமான உதவியெல்லாம் செய்யக் கடன்பட்டிருக்கிறார்கள். ஆகையினால், அவர்கள் விருத்தாப்பியரும், நோயாளிகளும், ஏழைகளுமாயிருக்கும்போது, தாங்கள் கடன்பட்டாவது அவர்களைப் நேசத்துடன் விசாரித்து, அவர்களுடைய தேவைகளையெல்லாம் நிறைவேற்றி, அவசியமான உதவி சகாயம் புரியக் கடமையுண்டு;

(3) மரண சமயத்தில் அவர்களுக்குப் புத்தி தெளிவு இருக்கும்போதே குருவானவரை அழைப்பித்து, அவஸ்தைப்பூசுதல் கொடுக்க முழு முயற்சி செய்யவேண்டியது. இது பிள்ளைகளுடைய பெரிய கடமை.

(4) அவர்கள் இறந்தபின் அவர்களது ஆத்தும இளைப்பாற்றிக்காக வேண்டிக்கொள்வதும் பிள்ளைகளுடைய கடமை.

15. ஆத்தும சரீர உதவி செய்யாததினால், கனமான பாவம் கட்டிக் கொள்ளும் பிள்ளைகள் யார்?

அவர்களுடைய ஆத்தும சரீர அவசரங்களில் அவர்களைக் கைவிட்டு விடுகிறவர்களும்; அவர்கள் வயோதிகரும், நோயாளிகளுமாயிருக்கும் காலத்தில் அவர்களுக்கு வேண்டிய அன்பையும், அக்கறையையும் காண்பியாமலிருக்கிறவர்களும்; விசேஷமாய் மரண நேரத்தில் அவர்களுடைய ஆத்துமத்துக்கு அவசியமான உதவிகள் புரிந்து குருவானவரைக் கூப்பிட அஜாக்கிரதையாய் இருப்பவர்களுமாம்.

கருத்துகள்