01. ஞானோபதேசமும் அதன் பயனும்!

ஞானோபதேச ஆடியோவைக் கேட்க மேலே உள்ள படத்தைக் கிளிக் செய்யுங்கள்...

வாழ்வைத் திருத்துவதே ஞான உபதேசம் கற்பித்தலின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று பாப்பரசர் அர்ச். பத்தாம் பத்திநாதர் கூறுகிறார்: “அத் எமெந்தாத்ஸியோனெம் வீத்தே.” இந்த நோக்கத்தை அடைவதற்கு, எல்லாவற்றிற்கும் முன்பாக, குழந்தைகளுக்கு வேதபாடம் கற்பிக்கப்பட்டு, தனிப்பட்ட முறையில் அதைத் தங்கள் வாழ்வில் அனுசரிப்பது எப்படியென்று அவர்களுக்குக் கற்பிக்கப்பட வேண்டும். வேதபாடத்தின் வார்த்தைகளையும், கருத்துக்களையும் தெளிவாக விளக்கிய பிறகு, ஒவ்வொரு ஞான உபதேச பாடத்தையும் குழந்தைகள் தங்கள் சொந்த வாழ்வில் அனுசரிக்கும் விதத்தை, ஒரு நாளின் பலவகை யான செயல்பாடுகளைப் பற்றிய நடைமுறைக் கேள்விகளைப் பயன்படுத்தி ஞான உபதேச ஆசிரியர் அவர்களுக்குக் கற்றுத் தர வேண்டும்.

உதாரணமாக, விசுவாசத்தைப் பற்றிய பாடத்தை எடுத்துக் கொள்வோம். அதன் முக்கிய அம்சங்களையும், கருத்துக்களையும் பற்றி விளக்கிக்கூறி, அதைக் குழந்தைகளுக்குத் தெளிவுபடுத்திய பிறகு, அடுத்து நாம் ஒரு நாளின் செயல்பாடுகளுக்கு வருகிறோம். நாம் கேட்கக் கூடிய சில கேள்விகள் பின்வருமாறு: நாம் நம் விசுவாசத்தின்படி எவ்வாறு வாழப் போகிறோம்? நம் விசுவாசம் உண்மையுள்ளது என்று நம் அன்புள்ள ஆண்டவருக்குக் காட்டும்படி நாம் சிந்திக்க வேண்டியதும், செய்ய வேண்டியதுமான காரியங்கள் என்ன?

அடுத்து, குழந்தைகள் தங்கள் சொந்த வாழ்வில், விசுவாச உணர்வை அனுசரிக்க முயலும்படி நாம் அவர்களிடம் கேட்க வேண்டும். தெருவில் நடந்து போகும்போதும், ஒரு கோவிலைக் கடந்து போகும் போதும், வீட்டிலும், பள்ளியிலும், விளையாட்டு நேரத்திலும், உணவு அருந்தும் வேளையிலும், காலையில் எழும்போதும், இரவில் உறங்கப் போகும்போதும் நீ எப்படி உன் விசுவாசத்தை வெளிப்படுத்துவாய் என்று நாம் அவர்களிடம் கேட்க வேண்டும். இறுதியாக, இவை தொடர்பாக ஒரு நல்ல பிரதிக்கினை எடுக்க நாம் அவர்களைத் தூண்ட வேண்டும்.

ஆனாலும் ஞான உபதேச விளக்கம், அதை வாழ்வில் அனுசரித் தல், பிரதிக்கினைகள் எடுத்தல் ஆகியவை சுபாவமான வழிகள் மட்டுமே என்பதால், குழந்தைகள் தங்கள் நல்ல பிரதிக்கினைகளைத் தங்கள் வாழ்வில் தவறாமல் அனுசரிக்கத் தேவையான வரப்பிரசாதத்தைப் பெற்றுக் கொள்ளும்படி, அவர்கள் ஜெபிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திக் கூறி, நாம் பாடத்தை முடிக்க வேண்டும்.

கருத்துகள்