30. மனிதனின் படைப்பு!

ஞானோபதேச ஆடியோவைக் கேட்க மேலே உள்ள படத்தைக் கிளிக் செய்யுங்கள்...

  • மனிதனின் சிருஷ்டிப்பு.
  • மனிதனின் தொடக்கம்.
  • மனிதனின் சுபாவம்.
  • மனிதனின் சரீரம்.
  • மனிதனின் ஆத்துமம்.
  • தேவ சுவாசம்.
  • ஆத்துமத்தில் கடவுளின் சாயல்.
  • ஆத்துமம் சரீரத்தோடு கொண்டுள்ள ஐக்கியம்.
  • ஆதாம் மனுக்குலத்தின் தந்தை.
  • ஏவாளின் சிருஷ்டிப்பு.
  • ஆதாம் ஏவாளின் நிலை.
  • மனிதனின் தொடக்க நிலைகள்.

முதல் மனிதனைப் படைத்த பின்பு, “மனிதன் தனிமையாயிருப்பது நல்லதல்ல ஆதலால், அவனுக்குச் சரிசமானமான ஒரு துணையை அவனுக்கு உண்டாக்குவோமாக'' என்றார் கடவுள் (ஆதி.2:18). அப்போது கடவுள் ஆதாமுக்கு ஆழ்ந்த உறக்கம் வரச் செய்தார். அது ஒரு வகையான பரவச நிலையாக இருந்தது. அந்த உறக்கத்தின் போது, அவர் அவனது விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அதை ஒரு பெண்ணாகச் செய்தார். அவர் அவளுக்குள் அழியாத ஆத்துமத்தை ஊதினார், அவளை அவர் ஏவாள் என்று அழைத்தார். அப்பெயருக்கு, “உயிருள்ளோருக்கெல்லாம் தாயானவள்'' என்பது பொருள்.

கடவுள் ஏன் ஆதாமின் விலாவெலும்பைக் கொண்டு ஏவாளை உருவாக்கினார் என்பது அர்ச். அக்குயினாஸ் தோமையாரால் அழகுற எடுத்துரைக்கப்படுகிறது. மாபெரும் அறிஞரான இந்தப் புனிதர் கூறுவதாவது: 

ஏவாள் ஆதாமின் தலையிலிருந்து எடுக்கப்படவில்லை, ஏனெனில், ஆணின் தலையாக இருக்கும்படி, அல்லது அவனை ஆளும்படி அவள் படைக்கப்படவில்லை; அவனுடைய பாதங்களிலிருந்தும் அவள் எடுக்கப்படவில்லை, ஏனெனில் அவள் மனிதனின் அடிமையல்ல, அவனால் நிந்தித்து மிதிக்கப்படுவதற்காக அவள் படைக்கப்படவில்லை.'' ஆனால் எதற்காக அவள் விலா எலும்பிலிருந்து உருவாக்கப்பட்டாள்? ஆணும், பெண்ணும் ஒருவருக்கொருவர் பங்காளியாகவும், துணைவராகவும் இருக்க வேண்டும் என்பதை இது குறித்துக் காட்டுகிறது, பெண் வாழ்வில் ஆணின் துணைவியாக அவனுக்கு அருகில் இருக்க வேண்டும், அவனுடைய வேலையில் அவனுக்கு உதவ வேண்டும், துயரத்தில் அவனைத் தேற்ற வேண்டும், அவனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும், அவனுடைய இருதயத்திற்கு மற்ற யாரையும்விட அதிக நெருக்கமானவள், அதிகப் பிரியமானவள் என்ற இடத்தை அவள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதைக் காட்டுவதற்காகவே அவள் ஆணின் விலாவிலிருந்து எடுக்கப்பட்டாள் என்று இந்தப் பரிசுத்த வேதசாஸ்திரியானவர் விளக்குகிறார்.

இவ்வாறு ஏவாளை உண்டாக்கியபின், கடவுள் அவளை ஆதாமிடம் அழைத்து வந்து, பரிசுத்த திருமண உறவில் அவர்களை ஒன்றிணைத்தார். அவர்களே முதல் மணமகளும், மணமகனுமாக இருந்தார்கள். அவர்களுடைய ஒன்றிப்பு கடவுளாலேயே நியமம் செய்யப்பட்டு, உறுதிப்படுத்தப் பட்டு, அர்ச்சிக்கப்பட்டது. அவர்களே பூமியின்மீது முதல் திருமணத் தம்பதிகளாக இருந்தார்கள். இந்த முதல் ஒன்றிப்பிலிருந்தே மற்ற எல்லா மனிதர்களும் உருவானார்கள், இந்த ஒன்றிப்பையே அவர்கள் தங்கள் தொடக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

கருத்துகள்