36. பிதாவினுடைய ஏக சுதனாகிய நமதாண்டவர் சேசுக்கிறீஸ்துவையும் விசுவசிக்கிறேன்!

ஞானோபதேச ஆடியோவைக் கேட்க மேலே உள்ள படத்தைக் கிளிக் செய்யுங்கள்...

ஏகம் என்றால் ஒன்று என்று அர்த்தமாகும். அதாவது “சர்வேசுரனுடைய ஏக குமாரன்” என்றால், அவருக்கு ஒரே ஒரு குமாரன் உண்டென்று அர்த்தமாகிறது.

சேசுகிறீஸ்துவை நமதாண்டவர் என்று ஏன் அழைக்கிறோம்?

(1) அவர் சர்வேசுரனாகிய மட்டும் சகல சிருஷ்டிகளையும் படைத்துக் காப்பாற்றி நடத்துகிறவராயிருக்கிறார். ஆதலால் சகல மனிதர்கள் பேரிலும், சிருஷ்டிகள் பேரிலும் அவருக்கு சர்வ அதிகாரம் உண்டு.

(2) அவர் சர்வேசுரனும் மனுஷனுமாகிய மட்டும் சகல மனிதர்களையும் தமது இரத்தத்தினால் பசாசின் அடிமைத்தனத் தினின்று மீட்டு இரட்சித்து அவர்களைத் தம் சொந்தப் பொருளாக்கிக் கொண்டார். ஆதலால் அவரை இராசாதி இராசனென்றும், ஆண்டவர்களில் ஆண்டவரென்றும் நியாயமாய் வாழ்த்தி ஆராதிக்கிறோம். (1 திமோ. 6: 15).

இவ்விரண்டாம் பிரிவில் என்ன விசுவசிக்கிறோம்?

(1) அர்ச். தமதிரித்துவத்தின் இரண்டாமாளாகிய தேவ சுதன் மனிதனாய் உற்பவித்துப் பிறந்தார்,

(2) சேசுகிறீஸ்துநாதர் என்பது அவருடைய பெயர்,

(3) இவர் பிதாவாகிய சர்வேசுரனுடைய ஏக சுதன்,

(4) நம்முடைய ஆண்டவர்,

(5) மெய்யான சர்வேசுரன்,

(6) பிதாவாகிய சர்வேசுரனை எப்படி விசுவசிக்கிறோமோ, அப்படியே சேசுநாதரையும் விசுவசிக்கிறோம்.

தேவசுதன், மனித சுபாவத்துக்கு மேற்பட்ட விதமாய், இஸ்பிரீத்துசாந்துவின் வல்லமையால், கன்னிமரியாயின் மகா பரிசுத்த உதரத்தில் மனித சுபாவத்தை, அதாவது மனித சரீரத் தையும் ஆத்துமத்தையும் எடுத்து, அவர்களிடமிருந்து மனிதனாய்ப் பிறந்தாரென்று விசுவசிக்கிறோம்.

சுதனாகிய சர்வேசுரன் ஏன் மனிதனானார்? 

“மனிதராகிய நமக்காகவும், நமது இரட்சணியத்தினிமித்தமும்” தேவசுதன் மனிதனானார் என்று “நீசே” என்கிற பிரமாணத்தில் வசனித்திருக்கின்றது. ஆகையால்:

(1) நமது பாவத்துக்குச் சரியான பரிகாரம் செய்யவும், 

(2) தமது போதனையாலும், முன்மாதிரிகையாலும் நமக்கு இரட்சணிய பாதையைக் காண்பிக்கவும்,

(3) தமது திருப்பாடுகளினாலும், மரணத்தினாலும் நம்மைப் பாவத்தின் அடிமைத்தனத்தினின்று மீட்கவும்,

(4) சர்வேசுரனுடைய சிநேகத்தில் நம்மைத் திரும்ப நிலைநிறுத்தவும், 

(5) இவ்விதம் நம்மை மோட்ச மகிமையில் கொண்டு சேர்க்கவும், சுதனாகிய சர்வேசுரன் மனிதனாகச் சித்தமானார்.

அவர் மனிதனானபிறகும், சர்வேசுரனாகத்தான் இருக்கிறார். உள்ளபடி அவர் மனிதனானபோது தம் பிதாவினின்று பிரிந்து போகாமல் அவரோடு ஒன்றித்து நிலைத்திருந்தார். “பிதா என்னிலும், நான் பிதாவிலும் இருப்பது...” (அரு. 10: 38), “நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருப்பதாக...” (அரு.14: 11). இவர் மெய்யான சர்வேசுரனாய் இருப்பதோடு மெய்யான மனிதனுமாக இருக்க ஆரம்பித்தார்.

சேசுநாதர்சுவாமி அற்புதமாய் உற்பவித்ததுபோலவே, அற்புதமாகப் பிறந்தார். அதெப்படியென்றால், தாம் உயிர்த்த போது, எப்படி கல்லறையின் முத்திரையை அழிக்காமலும், மூடின கல்லைத் திறக்காமலும் புதுமையாய் வெளிப்பட்டாரோ, அப்படியே தமது தாயின் கன்னிமைக்கு அற்பமேனும் பழுதில்லாமல் அவர்கள் உதரத்திலிருந்து பிறந்தருளினார் என்று அர்த்தமாகும்.

அர்ச். சூசையப்பர் சேசுகிறீஸ்துநாதரைப் பெற்ற தகப்பன் அல்ல; ஆயினும் அவரை சேசுவின் தகப்பனென்று அழைக்கிறோம். ஏனென்றால் அவர் அர்ச். கன்னிமரியம்மாளின் உண்மையான பத்தாவாக இருந்தபடியால், அவர்களுடைய திருக் குமாரன் மட்டில் தகப்பனுக்குரிய சுதந்தரங்களையும், கடமை களையும் நிறைவேற்றினார். சேசுகிறீஸ்துநாதரை ஏற்றுக் கொண்டு ஆதரித்துக் கவனிக்கும்படி சர்வேசுரனால் நியமிக்கப்பட்ட குடும்பத்துக்கு அர்ச். சூசையப்பர் தலைவராயிருந்ததினால் அவரை தகப்பன் என்று சொல்லுகிறோம்.

கருத்துகள்