ஞானோபதேச ஆடியோவைக் கேட்க மேலே உள்ள படத்தைக் கிளிக் செய்யுங்கள்...
சில சமயங்களில் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது: “நீங்கள் கத்தோலிக்கத் திருச்சபையைப் பற்றிப் பேசும்போது, உரோமைக் கத்தோலிக்கத் திருச்சபையைக் குறிப்பிடுகிறீர்களா?'' என்று.
“உரோமை'' என்ற வார்த்தையின் பொருளை அறிந்தவர்களாக, “இல்லை, எந்த உரிச்சொல்லின் விளக்கமுமின்றி, நாங்கள் கத்தோலிக்கத் திருச்சபையைக் குறிப்பிடுகிறோம். கிறீஸ்துநாதர் எல்லா ஜாதி ஜனங்களுக்கும் போதிக்கும் அலுவலை யாரிடம் ஒப்படைத்தாரோ, அவர்களிடமே தம் திருச்சபைக்கு ஒரு பெயரைத் தெரிந்து கொள்ளும் உரிமையை விட்டுச் சென்றார். அவரே கூட அதைத் “ என் திருச்சபை'' (மத்.16:18) என்றும், “திருச்சபை'' என்றும்தான் அழைத்தார் (மத்.18:17).''
ஆகவே, தொடக்கத்திலிருந்தே யூத மதத்திலிருந்து அது தெளிவாகப் பிரித்தறியப்படும்படியாக, அது திருச்சபை என்றே அழைக்கப் பட்டது. அர்ச். அந்தியோக்கு இஞ்ஞாசியார் கி.பி.50-107) அப்போஸ்தலரான அர்ச். அருளப்பரின் சீடராக இருந்தார். அவர் உரோமை மேற்றிராணியாராகிய அர்ச். இராயப்பரால் அந்தியோக்கு நகர மேற்றிராணியாராக நியமிக்கப்பட்டு, இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமது விசுவாசத்திற்காக வேதசாட்சியாக மரித்தார்.
அவரது காலத்தில், தங்களைக் கிறீஸ்தவர்கள் என்று அழைத்துக் கொண்டவர்களும், யூத மற்றும் அறிவுவாதப் பதிதங்களால் முழுவதுமாகப் பாதிக்கப் பட்டிருந்தவர்களுமான பிரிவினைவாதிகளின் சபைகள், திருச்பைக்கு ஒரு தனிப்பட்ட பெயர் தேர்ந்து கொள்ளப்படுவதை அவசியமான ஒன்றாக ஆக்கின.
இதன் காரணமாக, அர்ச். இஞ்ஞாசியார் ஸ்மிர்னாவைச் சேர்ந்த கிறீஸ்தவர்களுக்கு, “எங்கே சேசுக்கிறீஸ்துநாதர் இருக்கிறாரோ, அங்கேதான் கத்தோலிக்கத் திருச்சபையும் இருக்கிறது'' என்ற சுருக்கமான, ஆனால் உண்மையான வார்த்தைகளை எழுதினார். அவருக்குப் பின் மிக விரைவில், அர்ச். அகுஸ்தினார் தமது எழுத்துக்களில் அடிக்கடி “கத்தோலிக்க'' என்ற பெயரைப் பயன்படுத்தினார்.
உரோமைக் கத்தோலிக்கத் திருச்சபை என்ற பெயர் எலிசபெத் அரசியின் நாட்களில் இங்கிலாந்தில் அதிகாரபூர்வமாகவும், எதிரிடையான விதத்திலும் பயன்பாட்டிற்கு வந்தது. அது கிளைக் கொள்கை என்று அழைக்கப்பட்ட ஒரு கற்பனையான கொள்கையைப் பரப்பும்படி, புதிதாக இங்கிலாந்தில் ஸ்தாபிக்கப்பட்ட சபையின் உறுப்பினர்களால் பயன்படுத்தப்பட்டது. கிறீஸ்துநாதரின் திருச்சபை உரோமைத் திருச்சபை என்றும், கிரேக்கத் திருச்சபை என்றும், ஆங்கிலிக்கன் திருச்சபை என்றும் மூன்று கிளைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதாக அது கற்பனை செய்து கொள்கிறது.
ஆனால் கிறீஸ்துநாதர் பிளவுபட்டிருக்கிறாரா? நிச்சயமாக இல்லை. அப்படியே கிறீஸ்துநாதரின் இராச்சியத்தையும், ஒன்றுக்கொன்று சார்பற்ற மூன்று இராச்சியங்களாகப் பிரித்து, அதன்பின்னும் ஒரே இராச்சியத்தை, ஒரே கத்தோலிக்கத் திருச்சபையை நீங்கள் கொண்டிருக்க முடியாது. கிறீஸ்துநாதரின் தையலில்லாத ஆடையை யாரும் பல துண்டுகளாகப் பிரிக்க முடியாது.
கருத்துகள்
கருத்துரையிடுக