59. திருச்சபையின் போதகத்தின் தவறாவரம்!

ஞானோபதேச ஆடியோவைக் கேட்க மேலே உள்ள படத்தைக் கிளிக் செய்யுங்கள்...

கத்தோலிக்கத் திருச்சபைக்கு வெளியே உள்ள எந்த ஒரு பிரிவினை சபையும் தன் போதனைகள் தவறாவரமுள்ளவை, தப்பறையின் ஆபத்து இல்லாதவை என்று உரிமை பாராட்டவும், தன்னைச் சேர்ந்தவர்களுக்கு உறுதி கூறவும் முடியாது.

கத்தோலிக்கர்களால் பாப்பரசருக்கு அல்லது திருச்சபையிலுள்ள உச்சபட்ச போதக அதிகாரத்திற்கு உரியதாக விசுவசிக்கப்படும் “தவறாவரம்'' என்னும் வார்த்தை இவ்வாறு வரையறுக்கப்படுகிறது: 

அது, விசுவாசம் மற்றும் நல்லொழுக்க விதிகளின் காரியங்களில், தப்பறையில் விழாதபடி, அல்லது மற்றவர்களைத் தப்பறைக்குள் இட்டுச் செல்லாதபடி பாதுகாக்கப்படுகிற தனிப்பட்ட சலுகை ஆகும். 

திருச்சபை தவறாவரம் உடையது என்பதன் பொருள், சேசுக்கிறீஸ்துநாதரின் போதகத்தை மாற்றும் எல்லா ஆபத்திலிருந்தும், அல்லது தெய்வீக இரட்சகர் கற்பித்த, கட்டளையிட்ட, அல்லது செய்யவும், விசுவசிக்கவும் கூடாதென்று தடை செய்த காரியங்களின் உண்மையான பொருளைத் தவறாகப் புரிந்துகொள்ளும் ஆபத்திலிருந்தும் பாதுகாக்கப்பட திருச்சபை பெற்றுள்ள தனிப்பட்ட சலுகை என்பதாகும்.

சந்தேகமின்றி, கடவுள் ஒருவரே தம் சுபாவப்படி தவற முடியாதவராக இருக்கிறார். ஆனால், தமது பராமரிப்பின் ஒரு தனிச் செயலைக் கொண்டு, தம் திருப்பெயரால் மக்களுக்குப் போதிக்கத் தாம் நியமிப்பவர்களைத் தப்பறையினின்று பாதுகாக்கக் கடவுளால் முடியும். 

இவ்வாறு, அவர்கள் சத்தியத்திடமிருந்து எந்த விதத்திலும் ஒருபோதும் விலகிச் செல்லாதவாறு, அவர்களது போதனைகளில் அவர்களை வழிநடத்த அவரால் முடியும். நாம், நாம் மட்டுமே, நம் திருச்சபை இந்தச் சலுகையை, அல்லது வேறுபாட்டைக் கொண்டுள்ளது என்று உரிமை பாராட்டுகிறோம்.

கருத்துகள்