61. அர்ச் இராயப்பரின் முதன்மை அதிகாரம்! பாப்புத்துவம்!

ஞானோபதேச ஆடியோவைக் கேட்க மேலே உள்ள படத்தைக் கிளிக் செய்யுங்கள்...

"நீ இராயாயிருக்கிறாய், இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன், நரகத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ள மாட்டாது (மத்.16:18). 

"இதோ தெரிந்து கொள்ளப்பட்டதும், விலையேறப் பெற்றதுமான முக்கிய மூலைக்கல்லை சீயோன் நகரில் வைக்கிறேன்; அதன்மேல் விசுவாசமாயிருக்கிறவன் கலங்கமாட்டான்" (1 இரா.2:6). 

தெய்வீக வாக்குத்தத்தம் காலங்கள் தோறும் எதிரொலித்தக் கொண்டிருக்கிறது. அது திருச்சபையின் விசுவாசத்தில் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறது. 

கிறீஸ்துநாதரால் ஏற்படுத்தப்பட்ட திருச்சபை ஒரு காணக்கூடிய அமைப்பாக இருக்கிறது. ஆகவே, அது முறையாக செயல்பட அதற்கு ஒரு காணக் கூடிய தலைமை இருப்பது அவசியம். 

திருச்சபையின் காணப்படாத தலைவராகிய கிறீஸ்துநாதர் தமக்குப் பிரதிநிதியாக ஒரு காணக்கூடிய தலைவரைத் தேர்ந்தெடுத்ததே தகுதியானது என்று நினைத்தார். இதற்காக அவர் அர்ச். இராயப்பரைத் தேர்ந்தெடுத்தார். பரிசுத்த வேதாகமம் இதற்கு சாட்சியாக இருக்கிறது. 

பாப்பரசர், அர்ச். இராயப்பரின் ஸ்தானாதிபதி என்ற முறையில், புதிய திருச்சட்டத்தின் அனைவருக்கும் மேலான தந்தையாகவும், தேவ வாக்குறுதிகளின் வாரிசாகவும் இருக்கிறார் என்ற கத்தோலிக்கர்களின் உறுதிப்பாட்டில் அது தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறது.

மதப் பிளவுகளும், சண்டைகளும் நின்று போய், நம் இரட்சகராகிய சேசுநாதரின் ஜெபம் நிறைவேறி, “ஒரே மந்தையும், ஒரே ஆயனும்'' மட்டும் நிலைத்திருக்கும் நாள் விரைவில் வரும்படியாக நாம் ஜெபிப்போமாக. ஆமென்.

கருத்துகள்