63. திருச்சபை சரித்திரம்! பாகம் 01.

ஞானோபதேச ஆடியோவைக் கேட்க மேலே உள்ள படத்தைக் கிளிக் செய்யுங்கள்...

சேசுக்கிறீஸ்துநாதர் 30 வருடம் கீழ்ப்படிதலிலும் வேலையிலும், மறைவான ஜீவியத்திலும் செலவழித்த பின், தமது ஜீவியத்தின் கடைசி மூன்று வருடங்களிலும் தமது வேதத்தைப் போதித்து, அதைக் கணக்கற்ற அற்புதங்களினால் எண்பித்தார்.

அவர் பன்னிரண்டு அப்போஸ்தலர்களைத் தெரிந்து கொண்டு, அவர்களைப் போதகத்தில் பயிற்றுவித்து, பரிசுத்ததனத்தில் பழக்கி, எங்கும் போய்ப் போதிக்கும்படி அனுப்புகிறார்.

 சீமோன் இராயப்பர் அப்போஸ்தலர்களுக்குத் தலைமையாகவும், சகல விசுவாசிகளுக்கும் மேய்ப்பர்களுக்கும் மேலான மேய்ப்பராகவும் நியமிக்கப்படுகிறார்.

 இதன்பின்னர், மற்ற அப்போஸ்தலர்களும் உலக முடிவு வரைக்கும் போதித்து விசுவாசிகளை ஆண்டு வருவதற்கான அதிகாரமும் கட்டளையும் பெறுகிறார்கள். சேசுநாதர் இராயப்பருக்குத் தவறாத வரத்தை அளித்து, அப்போஸ்தலர்களோடும், அவர்களைப் பின்தொடர்ந்து வருபவர்களோடும் உலக முடிவு வரைக்கும் இருப்பதாகப் பன்னிருவருக்கு வாக்களிக்கிறார்.

 அப்போஸ்தலர்கள் திவ்விய இஸ்பிரீத்துவினால் புது மனிதர்களாகி சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கத் துவக்கி, யூதர்களில் அநேகரை மனந்திருப்புகிறார்கள்.

 தேவாலய அதிகாரிகள் இராயப்பரையும், அருளப்பரையும் பிடித்துச் சங்கத்தார் முன்னிலையில் கொண்டு போகிறார்கள். சேசுநாதர் பேரால் பிரசங்கிக்கக் கூடாதென்று சங்கத்தார் அவர்களுக்குக் கட்டளையிடுகிறார்கள். ஆனால் அப்போஸ்தலர்கள் அத்தகைய கட்டளைக்குக் கீழ்ப்படிய மாட்டோம் என்கிறார்கள்.

 முடியப்பர் என்ற தியாக்கோன், சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதில் மிகுந்த ஊக்கம் காண்பித்ததன் காரணமாக, யூதர்கள் அவரைக் கல்லால் எறிந்து கொல்கிறார்கள்.

 எருசலேமிலுள்ள கிறீஸ்தவர்கள் வேத கலாபனையின் நிமித்தம் அக்கம்பக்கத்து நாடுகளுக்குப் பிரிந்து போய், அவ்விடங்களில் இரட்சணிய சுவிசேஷத்தை அறிவிக்கிறார்கள்.

 அவர்களுடைய வெளிப்படையான விரோதியான சவுல் மனந்திரும்பி சின்னப்பர் (பவுல்) என்னும் பெயர் பெற்று, இரட்சகருடைய மகா ஊக்கமுள்ள அப்போஸ்தலர் ஆகிறார்.

 அர்ச். இராயப்பர் வாதைப்படும் கிறீஸ்தவர்களைச் சந்தித்து, புறஜாதியாரின், அதாவது அஞ்ஞானிகளின் மனந்திரும்புதலைத் தொடங்கி வைக்கிறார்; அவர்களுள் முதலாவதாகத் திருசச்சபையில் உட்பட்டவர் கொர்னேலியுஸ் என்ற செந்தூரியன்.

 ஆதிக் கிறீஸ்தவர்கள் பக்தியிலும், பிறர்சிநேகத்திலும், பரித்தியாகத் தன்மையிலும், மன தைரியத்திலும் சிறந்து விளங்குகிறார்கள்.


திருச்சபை ஸ்தாபகம்.

அப்போஸ்தலர்களைத் தெரிந்து கொள்ளுதல்.

சீமோன் இராயப்பரின் தலைமை.

சீமோன் இராயப்பருக்கு அளிக்கப்பட்ட அதிகாரம்.

அப்போஸ்தலர்கள் விசுவாசிகளின் மேய்ப்பர்கள்.

பெந்தேகோஸ்த்தின் அற்புதம்.

யூதர்களுள் மனந்திரும்புதல்.

அப்போஸ்தலர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்.

அர்ச். முடியப்பர் வேதத்துக்காக மரிக்கிறார்.

விசுவாசிகள் பல இடங்களுக்குப் பிரிந்து போகுதல்.

சவுல் மனந்திரும்புதல்.

புற ஜாதியார்களுள் (யூதரல்லாதார்) மனந்திரும்புதல்.

முதல் கிறீஸ்தவர்களின் ஜீவியம்.

கருத்துகள்