64. திருச்சபை சரித்திரம்! பாகம் 02.

ஞானோபதேச ஆடியோவைக் கேட்க மேலே உள்ள படத்தைக் கிளிக் செய்யுங்கள்...

 யூதர்களுடைய பிடிவாதத்தாலும், விசேஷமாய் திவ்விய எஜமானரின் கட்டளையாலும் அப்போஸ்தலர்கள் பல திசைகளுக்கும் பரவிப் போக வேண்டியதாயிற்று.

 இராயப்பர் பாலஸ்தீன் நாட்டிலும், பின்னர் அந்தியோக்கியாவிலும், கடைசியாய் உரோமையிலும் பிரசங்கித்து, உரோமையில் தமது ஆசனத்தை ஸ்தாபித்தார்.

 சின்னப்பர், புற ஜாதியாரின் அப்போஸ்தலர் என்று சிறப்புப் பெயர் பெற்றவர். சின்ன ஆசியாவிலும், சிப்புருவிலும், பாலஸ்தீன் நாட்டிலும், கிரேக்க நாட்டிலும் சுற்றித் திரிந்து, கடைசியாய் உரோமாபுரியில் திருச்சபைத் தலைவரோடு சேர்ந்து உழைத்தார். 

 சின்ன யாகப்பர் யூதர்களுக்குப் பிரசங்கித்து, எருசலேம் பட்டணத்து முதல் மேற்றிராணியார் ஆனார்.

 சேசுநாதரால் மிகவும் நேசிக்கப்பட்ட சீடராகிய அர்ச். அருளப்பர் சின்ன ஆசியாவில் பிரசங்கித்து, எபேசு பட்டணத்தில் தமது இருப்பிடத்தை ஸ்தாபித்தார்.

 அப்போஸ்தலர்கள் எருசலேமில் சங்கமாகக் கூடி, புதிய போதகர்களை எதிர்த்து, யூதர்களைப் போலவே, புற ஜாதியாரும் சுவிசேஷ போதகத்தை அறிவதற்குத் தகுதியுள்ளவர்கள் என்று வெளிப்படுத்தினார்கள்.

 அவர்கள் பெரும்பாலும் வாய்மொழியாகவே போதித்தார்கள். ஆயினும் அவர்களில் சிலரும், சீடர்களில் சிலரும் திவ்விய இஸ்பிரீத்துசாந்துவின் ஏவுதலால் சில விஷயங்களை எழுதி வைத்தார்கள்; விசுவாசிகள் இவற்றை தேவ வாக்கியங்களாக ஏற்றுக் கொள்கிறார்கள்.

 பாரம்பரியம் அல்லது வெளிப்படுத்தப்பட்ட சத்தியங்களை வாய்மொழியாகத் தெரிவித்தல், வேதாகமத்தைப் போலவே தெய்வீக ஆதாரமுள்ளது.

 யூதர்கள் உரோமையரின் நுகப் பழுவைத் தாங்க முடியாமல் எதிர்த்து நிற்கத் தலைப் பட்டார்கள். தீத்துஸ் எருசலேமைப் பிடித்து அதை அடியோடு அழித்துப் போட்டான். ஆட்ரியன் அரசாட்சி புரியும் காலத்தில் மீண்டும் ஒரு முறை எதிர்க்கத் துணிந்ததன் காரணமாக, அவர்களது இரத்தம் பெருமளவுக்கு சிந்தப்பட்டது; இந்த இரத்த வெள்ளத்துக்குத் தப்பித்த இஸ்ராயேலின் மக்கள் நாலாதிசையிலும் சிதறிப் போனார்கள்.


அப்போஸ்தலர்கள் பிரிந்து போகிறார்கள்,

அப்போஸ்தலிக்க போதகங்கள்,

எருசலேமில் கூடிய சங்கம்,

அப்போஸ்தலிக்க நூல்கள்,

அப்போஸ்தலிக்கப் பாரம்பரியம்,

யூதர்களுக்குக் கிடைத்த தண்டனை,

எருசலேம் பட்டணத்தின் அழிவு.

கருத்துகள்