96. நரகத்தைப்பற்றிய சிந்தனை நல்லதா?

ஞானோபதேச ஆடியோவைக் கேட்க மேலே உள்ள படத்தைக் கிளிக் செய்யுங்கள்...

நரகவாசிகள் அவலட்சணமுள்ள பசாசுகளைக் கண்டு, இடைவிடாமல் நடுங்கிப் பயப்படுவார்கள். மேலும் அந்தப் பசாசுகள் அவர்களை ஓயாமல் நிந்தித்து, சபித்து, அடித்து, கொடூரமாய் வாதித்து வருவதால், பாவிகள் சொல்லிலடங்காத வேதனை அனுபவிப்பார்கள். நரகப் பாவிகளைத் துன்புறுத்துவது பசாசுகளுக்கு உரியதென்று வேதாகமம் சொல்கிறது (சர். பிர. 39:33, 34).

சர்வேசுரனைப் பகைக்கும் இந்த நீச அரூபிகள், அவர்பேரில் தங்கள் கோபமும் பகையும் செல்லாதென்று கண்டு, அவருடைய சாயலாயிருக்கும் மனிதன்பேரில் தங்கள் பகையைக் காட்டும்.

ஒரேயொரு பசாசைக் கண்ட அர்ச். சியெனா கத்தரீனம்மாள், "அந்தச் சமயத்தில் சர்வேசுரன் அற்புதமாய் என் உயிரைக் காப்பாற்றியிராவிட்டால், நான் பயத்தினால் தப்பாமல் இறந்து போயிருப்பேன்" என்று எழுதினாள் என்றால், கோடிக்கணக்கான பசாசுக்களின் மத்தியில் தொடர்ந்து இறந்து கொண்டும், அதன்பின் துன்பப்படுவதற்காகவே மீண்டும் உயிர் பெற்றுக் கொண்டுமிருக்கிற சபிக்கப்பட்ட பாவியின் நிலை என்னவாயிருக்கும்!

நரகப் பாவிகள் ஒருவரையொருவர் தீராத பகையோடு வெறுக்கிறார்கள். அவர்களுக்குள்ளே சண்டையும் சச்சரவும் இருக்குமே தவிர ஒற்றுமை, சமாதானம் இராது. 

உலக முண்டான நாள் முதல் உலகின் கடைசி நாள் மட்டும் இருக்கும் சகல வகைப் பாவிகளும், துன்மார்க்கரும், அநீதரும், அயோக்கியரும், அக்கிரமிகளும், கொலை பாதகரும், திருடரும், வஞ்சகரும், குடியரும், காமாதுரரும் ஆகிய இவர்கள் எல்லோரும் அங்கே கூடி இருப்பார்கள். இவர்கள் ஒருவரொருவரைக் கடித்து உதைத்து கர்ச்சித்து, ஊளையிட்டு, கதறி அலறிப் புலம்புவார்கள்.

கருத்துகள்