97. பணக்காரனும் லாசரும்! நரகத்தின் வேத சத்தியங்கள்!

ஞானோபதேச ஆடியோவைக் கேட்க மேலே உள்ள படத்தைக் கிளிக் செய்யுங்கள்...

நரகத்தில் எல்லா விதமான துன்பங்களும் நிறைந்திருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால் அவை எல்லாவற்றிலும் மிகக் கொடூரமானது, இனி நித்தியத்திற்கும் கடவுளை இழந்து போனேனே என்ற ஆத்துமத்தின் வேதனை தான். 

சமீப காலங்களில் அடிக்கடி செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிச் செய்திகளிலும் நாம் காணும் ஒரு செய்தியை நினைத்துக் கொள்ளுங்கள். சிறு குழந்தைகள் தண்ணீருக்காகத் தோண்டப்பட்ட ஒடுக்கமான போர்வெல் குழிகளுக்குள் விழுந்து சிக்கிக் கொண்டு இறந்து போகிறார்கள். 

100 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டு இன்னும் உயிரோடிருக்கிற அந்தக் குழந்தையின் மனநிலையை சிந்தித்துப் பாருங்கள்! அவன் தன்னைப் பெற்றவளை நினைக்கிறான்! அன்பும், கதகதப்பும் நிறைந்த அவளுடைய மடியை நினைக்கிறான். அவளிடம் எப்படியாவது போய்ச் சேர்ந்து விடத் துடிக்கிறான். ஆனால் அது அவனால் முடியாது. மிகக் கொடூரமான வேதனைதான் இது! 

ஆனால் கடவுளை இழந்து, அவருக்காக நித்தியத்திற்கும் ஏங்கிக் கொண்டேயிருக்கப் போகிற ஆத்துமத்தின் வேதனை, துன்ப துயரத்திற்கு முன்பாக, இந்தக் குழந்தையின் வேதனை ஒன்றுமேயில்லை எனலாம்!

அர்ச். சாமிநாதர் சபையின் அதிபராயிருந்த முத். ஜோர்டான் என்பவர், ஒரு முறை ஒரு மனிதனைப் பிடித்திருந்த சாத்தானிடம்: "கடவுளின் காட்சியைப் பெற அனுமதிக்கப்படுவதற்கு நீ எதைத் தர ஆயத்தமாயிருப் பாய்?" என்று கேட்டபோது, சாத்தான் இப்படிப் பதில் சொன்னான்: "கூரிய முனைகளும், ஆணிகளும், ஊசிகளும் வெளிப்புறத்தில் கொண்ட ஒரு தூண் பூமியிலிருந்து மோட் சத்திற்கு ஊன்றப்பட்டிருக்குமானால், ஒரு சில விநாடிகள் மட்டுமாவது அந்த தெய்வீகத் திருமுகத்தின் காட்சியை உற்று நோக்க அனுமதிக்கப்படுவதற்காக, இன்றிலிருந்து தீர்வையின் நாள் வரையிலும் அந்தத் தூணின் மீது மேலும் கீழுமாக இழுத்துச் செல்லப்பட நான் மகிழ்ச்சியோடு சம்மதிப்பேன்!!"

ஆ, சபிக்கப்பட்ட ஆத்துமத்தின் இந்தப் பேரிழப்பு எவ்வளவு நிர்ப்பாக்கியமானது! அது அனுபவிக்கிற இந்தக் கொடூர வேதனையை எந்நிலையிலும் மனிதரால் விளங்கிக் கொள்ள முடியாது. மனித அறிவுக்கு இது எட்டாது. இதையே அர்ச். பொனவெந்தூர், “நரகத்திலுள்ள சபிக்கப்பட்டவர்கள் வேறெதையுமன்றி எப்போதும் கடவுளைப் பற்றி மட்டுமே சிந்திக்கும்படி கட்டாயப்படுத்தப்படுவார்கள். இது அவர்களை சொல்லிலடங்காத விதமாக வாதிக்கும். கடவுளைப் பற்றிய சிந்தனை தரும் வாதையை விடப் பெரிய வாதை எதுவும் சபிக்கப் பட்ட ஆத்துமத்திற்கு இல்லை" என்கிறார்.

கருத்துகள்